திருக்காலிமேடு ஸ்ரீஆனந்தவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், டிச.1:
காஞ்சிபுரம் நகர் திருக்காலிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரில் திருக்காலிமேடு வீரசிவாஜி தெருவில் ஆனந்த விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு புதியதாக கோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோ.பூஜை ஆகியன நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலையில் மகா பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் புனித நீர்க்கலசங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து மூலவர் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இரவு உற்சவர் ஆனந்தவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகளும் திருக்காலிமேடு பகுதி பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.
படவிளக்கம் : கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவர் ஸ்ரீஆனந்த விநாயகர்
No comments
Thank you for your comments