தொண்டு உள்ளத்துடன் மருத்துவச் சேவை செய்யுங்கள்,இளம் மருத்துவர்களுக்கு பத்மஸ்ரீ விருதாளர் அறிவுரை
காஞ்சிபுரம், டிச.23:
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 17 வது ஆண்டு பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தின் வேந்தர் ஆர்.கோமதி தலைமையில் நடைபெற்றது.
துணை வேந்தர் நீலகண்டன்,இணை வேந்தர் கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
விழாவில் மருத்துவத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த 154 பேர்,முதுகலைப்பட்ட மருத்துவப் படிப்பை முடித்த 72 பேர் உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், பத்மஸ்ரீ விருதாளருமான மருத்துவர் மோகன் காமேசுவரன் பட்டங்களை வழங்கி பேசியது.
பட்டப்படிப்பை நிறைவு செய்த இளம் மருத்துவர்கள் தங்களது அறிவையும்,திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும், அதற்குத் தேவையான உற்சாகமான உழைப்பு இருக்க வேண்டும்.
குறிக்கோளை அடைய முற்படும் போது இடையூறுகள் ஏற்பட்டால் அதைக்களைந்து வெற்றி பெற்றாக வேண்டும்.
எப்போதும் வணிக நோக்குடன் இல்லாமல் தொண்டு உள்ளத்துடன் மருத்துவச் சேவையாற்ற வேண்டும். உங்களை நாடி வருவோரிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வது அவசியமானது என்றும் அவர் பேசினார்.
விழாவில் பல லட்சம் ஏக்கரில் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்த தஞ்சாவூரை சேர்ந்த நிர்மல்ராகவன் என்பவருக்கு ரூ.5 லட்சமும், சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூ.10லட்சமும் நன்கொடையாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள்,பட்டம் பெற வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments