காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் லட்சதீபம் - கூட்ட நெரிசலால் பக்தர்கள் அவதி
காஞ்சிபுரம் :
பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படும் பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில்.வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி ஆலயத்தின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாகவும்,தனித்தனியாகவும் சிவலிங்கம் போல கோலம் வரைந்து மலர்களால் அலங்கரித்தும் அதனைச் சுற்றி அகல்விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.ஆலய வளாகம் முழுவதுமே அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டு பிரகாசமாக காணப்பட்டது.
பக்தர்கள் பலரும் ஆலய வளாகத்தில் தனித்தனியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.சிறப்பு தரிசனத்துக்கு ஆலய நிர்வாகம் ரூ.5 கட்டணமாக வசூலித்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர்.விழாவில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி ஆர்.பொன்னி உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி,ஆலய அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன் ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.நால்வர் நற்றமிழ் மன்றத்தின் சார்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கூட்ட நெரிசலால் பக்தர்கள் அவதி
மகா கும்பாபிஷேகம் செய்யப்படுவதற்காக திருப்பணிகள் நடந்து கொண்டிருப்பதால் ஆலயத்தின் நுழைவுவாயில் ராஜகோபுரம் அடைக்கப்பட்டிருந்தது.இதனால் பக்தர்கள் அருகில் உள்ள வாகனங்கள் செல்லும் வாயில் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலுக்கு உட்புறத்திலிருந்து வெளியில் வருவோரும்,கோயிலுக்குள் செல்வோரும் ஒரே பாதையில் சென்றதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலரும் அவதிப்பட்டனர். காவல்துறையினரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
ஆலயத்துக்குள்ளிருந்த கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோயிலுக்குள்ளிருந்து வெளியில் வர முடியாமல் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.ஆலய நிர்வாகிகள் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.




No comments
Thank you for your comments