Breaking News

கைத்தறி தொழிலில் மாநில அளவில் சிறந்த வடிவமைப்பாளர் களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு

கைத்தறி தொழிலில் மாநில அளவில் சிறந்த வடிவமைப்பாளர் களுக்கான போட்டித் தேர்வு 2023-2024 நடைபெறுகின்றன.


இதுகுறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளதாவது, 

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் 2022-2023-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டவாறு, இளம் வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கவும், கைத்தறியில் புதிய வடிவமைப்புகளை உருவாக்கவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முதல் மூன்று பரிசு பெற்ற இளம் வடிவமைப்பாளர்களுக்கு 18.04.2023 அன்று பரிசுகள் வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டும் (2023-2024) சிறந்த வடிவமைப்புகளாக மாநில அளவில் இளம் வடிவமைப்பாளர்களிடமிருந்து போட்டித் தேர்வுக்கான வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

1.   இத்திட்டத்தில் கலந்து கொள்ள கீழ் குறிப்பிட்ட நிறுவனங்கள் / தனிநபர்கள் தகுதி பெறுகிறார்கள்.

2.   வடிவமைப்பு நிறுவனங்கள்/ஜவுளி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்

3.   வடிவமைப்பாளர்கள்/தன்னுரிமை வடிவமைப்பாளர்கள்/நுண் கலை அறிவியல் கல்லூரிகள்/நயப்போக்கு ஜவுளி நிறுவனங்கள்/தேசிய நாகரிக தொழில்நுட்ப நிறுவனம் (NIFT).

4.   அரசு கவின் கலை கல்லூரி மற்றும் இதர தொடர்புடைய நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்கள்.

 திட்டத்தின் குறிக்கோள்: 

கைத்தறியில் நெய்யப்படும் இரகங்களின் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு பாரம்பரியமிக்க உருவங்கள், புதிய வடிவமைப்புகள், சிறந்த வண்ணக்கலவைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கவும் திறன்மிக்க இளம் வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இத்திட்டத்தில் பங்கு பெற தகுதியானவர்கள்: 

1. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து காஞ்சிபுரம் சரக துணை இயக்குநர் அலுவலகத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 2. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். 

3. கைத்தறிகளில் எளிதில் நெசவு செய்யக் கூடிய வடிவமைப்புகளாக இருத்தல் வேண்டும்.

4.  இப்போட்டியில் இடம் பெறும் வடிவமைப்புகள் சிறந்த கருப்பொருட்கள்/கருத்துக்கள் அல்லது புதுமையான சிந்தனைகளாகவும், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கைத்தறிகளில் பயன்படுத்தத்தக்க வடிவமைப்புகளாக இருத்தல் வேண்டும்.

5. வடிவமைப்பு உருவாக்கப் கருப்பொருட்கள்/கருத்துக்கள் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட வண்ணக் கலவைகள் தொடர்பான சிறு குறிப்பு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. கீழ் குறிப்பிட்ட இரகங்களில் நெசவு மேற்கொள்வதற்கு வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

i) சேலைகள்: a. பருத்தி சேலைகள் b. பட்டு சேலைகள் c. செயற்கை நூல் மூலம் நெய்யப்பட்ட சேலைகள்.

ii) வீட்டு உபயோகப்பொருட்கள்:  a.பெட்ஷீட் (Bed sheet) b.படுக்கை விரிப்பு (Bedspread)  c.திரைச்சீலைகள் மற்றும் தொடர்புடைய துணிகள் (curtain cloth and similar items).

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:

1. விண்ணப்பதாரர்களால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வடிவமைப்பாக இருத்தல் வேண்டும்.

2. வாடிக்கையாளர்கள் விரும்பி பயன்படுத்துவதற்கு ஏற்றதாக வடிவமைப்புகள் இருத்தல்            வேண்டும். (User-friendly designs)

3. விண்ணப்பதாரர்களுடைய சொந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட புதுமையான     வடிவமைப்புகளாகவோ அல்லது எந்த வடிவமைப்பு மூலத்தை வைத்து தயாரிக்கப்பட்டது என     தெரிவிக்கப்படவேண்டும்.

4. எளிதாக நெசவு செய்ய ஏற்றதாக வடிவமைப்புகள் இருத்தல் வேண்டும். (Easy to weave)

5. வடிவமைப்புகள் கீழ் குறிப்பிட்டுள்ள அளவீடுகளில் இருத்தல் வேண்டும்.

     a. 13X19 – 300 GSM Art Board with (A4 Size design pattern in the Left side and Design description          in the right side), Border can vary from 1” to 5” – pallu should be above 27” – Body Butta 1.5” to 6”

6. வடிவமைப்பு தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் (Sketch process, Drawing process and Graph process).

7. வடிவமைப்புகளில் பாரம்பரியமிக்க வண்ணங்கள் மற்றும் புதிய வண்ணக்கலவைகளில் ஒருங்கிணைப்பாக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங் களுக்கான பரிசுப் பொருட்கள்:

தமிழ்நாடு அரசால் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் மாநில அளவிலான செயற்குழு மூலமாக வழங்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வடிவமைப்பாளர்களுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்படும்.

i)  முதல் பரிசு         – தொகை ரூ.1,00,000/-

ii) இரண்டாம் பரிசு  – தொகை ரூ.75,000/-

iii) மூன்றாம் பரிசு    – தொகை ரூ.50,000/-

இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 11.12.2023-உடன் முடிவடைந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக போட்டியாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும் வகையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இத்திட்டத்தின்கீழ் 31.12.2023 வரை விண்ணப்பங்கள் நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அஞ்சல் வழியாகவோ வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் வழிமுறைகள், விண்ணப்பபடிவம் உள்ளிட்ட தரவுகளை https://loomworld.in எனும் இணையதளத்தில் இருந்து கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அலுவலக முகவரி:-

824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு,

காமாட்சியம்மன் காலனி,

ஓரிக்கை, காஞ்சிபுரம்

மின்னஞ்சல்: ddht_kpm@yahoo.com

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments