போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி விடாதீர்கள் - காஞ்சிபுரம் எஸ்பி வேண்டுகோள்
காஞ்சிபுரம், நவ.30:
போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் உடல்நலமும்,மனநலமும் கெட்டு விடும் என்று காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் வியாழக்கிழமை அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வெள்ளத்துரை, சார்லஸ் ஷியாம் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆர்.சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியில் ஆன்டி டிரக் கிளப் என்ற போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பை தொடக்கி வைத்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் பேசியது.
கல்லூரியில் பயிலும் காலத்தில் மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது.அது உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதித்து விடும்.அத்தோடு நில்லாமல் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தையும் பாதிக்கும் போதைப் பழக்கத்தில் யாரும் ஈடுபடாமல் இருக்கவே மாணவர்கள் அமைப்பாக ஆன்டி டிரக் கிளப் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு மாணவர்களை போதைப்பழக்கத்திலிருந்து விடுபடவும், ஈடுபடாமல் தடுக்கவும் பேருதவியாக இருக்கும் என்றும் எஸ்பி எம்.சுதாகர் பேசினார். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் மனநல மருத்துவர் பிரபு கலந்து கொண்டு போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் பொருட்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரிவாக விளக்கினார்.
போதைப்பொருளை பயன்படுத்த மாட்டோம் என்றும் அனைத்து மாணவர்களும் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து காவல் அலுவலர்களுக்கும் புத்தகம் பரிசாக வழங்கினார்.நிறைவாக பேராசிரியர் கணபதி நன்றி கூறினார்.
படவிளக்கம் : கருத்தரங்கில் பங்கேற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு புத்தகம் பரிசாக வழங்கிய கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன்.உடன்(வலது ஓரம்) காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர்
No comments
Thank you for your comments