Breaking News

காஞ்சிபுரத்தில் மீண்டும் என்கவுண்டர் - 2 ரவுடிகள் சுட்டுக்கொலை... அதிகாலையில் அதிர்ந்த காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் :


காஞ்சிபுரத்தில் ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், காவல்துறையினர் இன்று அதிகாலை 2 ரவுடிகளை என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா(35) என்கிற சரவணன். இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

பல்லவர் மேடு பகுதியில் குட்டி ரவுடியாக வலம் வந்த பிரபா, அவ்வப்போது சிறைக்கு செல்வதும் ஜாமினில் வெளி வருவதுமாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் பிரபாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது தப்பி ஓடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 

ஜாமினில் வெளியே வந்த பிரபா காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், ஆஜராவதற்காக பல்லவர் மேடு பகுதியில் இருந்து நடந்து சென்றார். அப்போது வெள்ளை நிற காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை இடிப்பது போன்று வந்துள்ளது. 

சுதாரித்துக் கொண்ட பிரபா அங்கிருந்து ஓட முயற்சி செய்தார். காலில் அறுவை சிகிச்சை செய்ததால் வேகமாக ஓட முடியாத பிரபா அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டார். ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப் பகலில் சாலையில் வைத்து பிரபாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.

முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பிரபா துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தேறியிருப்பது தெரியவந்தது.

உயிரிழந்த பிரபாவின், சகோதரர் நாராயணமூர்த்தியை, ரகு என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்தார். ரகுவை பழிக்கு பழி வாங்க திட்டம் தீட்டி காத்திருந்த பிரபா, அவரது இரு சகோதரர்களை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு கொலை சம்பவங்களுக்கும் பழிக்குப் பழியாக, பிரபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் புதிய ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதிய ரயில் நிலையம் அருகே இந்திரா நகர் சர்வீஸ் சாலையில் பதுங்கி இருந்த ரவுடிகளை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் மூலம் சிவகாஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி தப்பி செல்ல முயன்றனர். அதனையடுத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய போது தற்காப்பிற்காக ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் பெயர் ரகு என்கிற ரகுவரன், கருப்பு பாட்ஷா என்கிற ஹசைன் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் இருவரும் காவல்துறையினரை அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்துள்ளனர்.  இருவரது உடலும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலர்கள் இருவருக்கும் காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மீனாட்சி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் இரு காவலர்களையும் வடக்கு மணடல ஐ.ஜி. கண்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பொன்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உள்ளிட்ட காவல் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்த என்கவுண்டர் சம்பவத்தை வெள்ளத்துரை தலைமையிலான போலீசார்  செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments