காஞ்சிபுரம் மாவட்டத்தில் 375 ரவுடிகள் நடவடிக்கை கண்காணிப்பு - வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பேட்டி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் சரகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறை முனைப்புடன் செயல்படுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 375 ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களது நடவடிக்கையை காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பகுதியில் பிரபல ரவுடி பிரபாகரன் என்பவர் பிள்ளையார் பாளையம் பகுதியில் நேற்று பட்டப் பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட எஸ்பி சுதாகர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோரை குற்றவாளிகள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதை தொடர்ந்து தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சுதாகர் இரண்டு பேரையும் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை மேற்கொண்டதில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் சரக டி ஐ ஜி பொன்னி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து கொலையாளிகள் வெட்டியதில் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன், கொலை குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது ஏற்பட்ட தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் ஆகியோரை சந்தித்து நடந்த விஷயங்களை கேட்டு அறிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதால் அவ்வப்போது ரவுடிகள் புதிதாக உருவாகி வருவதாகவும், மாவட்டத்தில் மட்டும் 375 ரவுடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதேபோன்று தொழிற்சாலைகளில் ரவுடிகள் யாரேனும் மாமூல் கேட்டு மிரட்டினால் அது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் அது குறித்து மிரட்டல்களை நவீன தொழில்நுட்பத்துடன் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து அறிந்து விசாரணை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்துடன் செயல்படுவதாகவும் ஐஜி கண்ணன் தெரிவித்தார்.

No comments
Thank you for your comments