Breaking News

ஆட்டோவில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றினால் நடவடிக்கை - போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்,  நவ.18:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்டோக்களில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றியது கண்டு பிடிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.

படவிளக்கம் : காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் அதிக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற ஆட்டோவிற்கு அபராதம் விதித்த போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம்,ஒலிமுகம்மது பேட்டை ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ஆட்டோவில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றி வந்த 3 ஆட்டோக்களை வழிமறித்து நிறுத்தி அதன் ஓட்டுநர்களிடம் அவர் எச்சரித்து பேசியதாவது : -

காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில் எம்.சாண்ட் மணலை 3 சரக்கு லாரிகளில் அதிகமான அளவில் ஏற்றியது மற்றும் 6 ஆட்டோக்களில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றி வந்தது உட்பட மொத்தம் 6 வாகனங்களின் ஓட்டுநர்களிடம் ஒரே நாளில் மொத்தம் ரூ.1.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் குழந்தைகளை அதிகமாக ஏற்றுகிறார்களா என்பதை பெற்றோர்களும் கண்காணித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது தவறானது. ஆட்டோக்களில் மாணவ, மாணவியர்களை அதிகமாக ஏற்றுவதும், சரக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதும் சட்டப்படி குற்றமாகும். விதிமீறலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் ஓட்டுநர்களை எச்சரித்தார்.


No comments

Thank you for your comments