Breaking News

காஞ்சிபுரம் வரதர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா

காஞ்சிபுரம், நவ.27:

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் திருக்கார்த்திகையை யொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் திங்கள்கிழமை நடைபெற்றது.

அத்திவரதர் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள வரதர் கோயில் எனப்படும் தேவராஜசுவாமி திருக்கோயில்.

இக்கோயிலில் திருக்கார்த்திகைத் திருநாளையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். ஆலயத்தில் உள்ள கொடி மரத்துக்கு முன்பாக சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாண வேடிக்கைகளும், பட்டாசுகள் பல வெடித்தும் கொண்டாடப்பட்டது.பின்னர் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளியதும் தேசிகன் சுவாமிகளுக்கு மரியாதை செய்விக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பெருமாள் திருக்கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து ஆலயம் எழுந்தருளினார். ஆலய சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவர் சந்நிதியில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை உற்சவம் நடைபெற்று கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.


படவிளக்கம் : திருக்கார்த்திகை திருநாளையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வீதியுலா வந்த உற்சவர் வரதராஜப் பெருமாள்



No comments

Thank you for your comments