ஏழைகளின் வாழ்க்கை உயர பாடுபட்டவர் கருணாநிதி - சபாநாயகர் மு.அப்பாவு பேச்சு
காஞ்சிபுரம் :
ஏழைகளின் வாழ்க்கை உயரவே தன் பேனாவை கருணாநிதி பயன்படுத்தினார் என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பேசினார்.
நூற்றாண்டு விழா
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி. க.செல்வம்,எம்.எல்.ஏ. க.சுந்தர்,காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப் பேரவையின் செயலாளர் கி.சீனிவாசன் வரவேற்று பேசினார்.
அப்பாவு
விழாவில் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும்,ரொக்கப்பரிசும் வழங்கி பேசியதாவது,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா கதை,கட்டுரை,நாடகம்,கதை வசனம் என பலவற்றை எழுதியது.அவர் எழுதிய நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பலரும் ஏங்கினர்.
ஏழைகளின் வாழ்க்கை
ஏழைகளின் வாழ்க்கை உயரவே தன் பேனாவை பயன்படுத்தியவர். உழைப்பால் உயர்ந்த அவர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக அமர்ந்தவர்.கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது.தமிழை உலகமறியச் செய்த பெருமை கருணாநிதிக்கே பொருந்தும். சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது தான் தமிழ் என்கிற ஒரு மாயை இருந்து வந்ததை தகர்த்தெறிந்தவர்.
உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் தமிழே மூத்த மொழி.மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை ஆகியனவற்றில் தமிழே ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.
ஆட்சிமொழி
இந்தியாவிலும் தமிழ் மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். அவரது வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று பெண்கள் முன்னேற்றத் துக்காகவும் பல மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
மகளிர்க்கு மாதம் தோறும் ரூ.1000 பெரும் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் மூலம் 1.13 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். கல்வியில் முன்னேறிட கல்லூரி மாணவியர்க்கு புதுமைப்பெண் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.வெற்றிச் செல்வி,கோட்டாட்சியர் எஸ்.ரம்யா,பச்சையப்பன் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக சட்டப்பேரவையின் இணைச் செயலாளர் மலர்விழி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments