Breaking News

காற்றில் பறக்கும் மேயர் உத்தரவு... அதிகாரிகள் மெத்தனபோக்கு

வேலூர், நவ.21-

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உயிர்ப்பலியாகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தனர். இதனை காலச்சக்கரம் நாளிதழ் பலமுறை சுட்டிகாட்டி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 30ம் தேதியும் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 


தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் எதிரொலியாக வேலூர் மாநகராட்சி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை பெயரளவில் இல்லாமல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுப்பதையே மாநகராட்சியின் வாடிக்கையாக உள்ளது என்பதை மீண்டும் மாநகராட்சி நிரூபித்துள்ளது .

காலச்சக்கரம் சுட்டிக்காட்டியது

வேலூர் மாநகராட்சியில் உள்ள முக்கிய போக்குவரத்து சாலை பகுதிகளிலும், தெருக்களிலும், ஏராளமான மாடுகள், கால்நடைகள் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் சுற்றி திரிந்து வருகின்றன. 

இதுபற்றி காலச்சக்கரம் நாளிதழ் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளது.  ஆனால் தற்போதும் சாலைகளில் படுத்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

போக்குவரத்து பாதிப்பு

வேலூர் மாநகராட்சியில் முக்கிய  போக்குவரத்து சாலையான காட்பாடி -பாகயம் போக்குவரத்து சாலையில் மாடுகளை கூட்டம் கூட்டமாக செல்வதை பார்க்க முடியும்.  

சாரதி மாளிகை, கிரீன் சர்க்கிள், வேலூர் மாநகராட்சி பழைய பஸ் நிலையம் , புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி , காகிதப்பட்டறை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மாடுகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கின்றன.  இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அச்சம் கொள்கின்றனர். 

இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்தாலும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மாடுகளை பிடித்தனர்

சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பி வந்தனர்.

பொதுமக்களின் புகாரை அடுத்து மேயர் சுஜாதா உத்தரவின் பெயரில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சாலையில் சுற்றித்திரிந்த  மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் அந்த மாடுகளுக்கு தலா ரூ.1000 அபராதமும், மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிடிக்கப்பட்ட மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. 

இந்த பணிகளை கடந்த மாதம் வேலூர் மேயர் சுஜாதா நேரில் சென்று ஆய்வு செய்தார். இனி சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் இந்த எச்சரிக்கை இன்று காற்றிலே பறக்கிறது என்பதுதான் நிதர்சனம். பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுப்பதையே மாநகராட்சியின் வாடிக்கையாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் மாநகராட்சி நிரூபித்துள்ளது . ஆங்காங்கே சாலைகளில் மாடுகள் நடந்து செல்கின்றன. படுத்து கிடந்தும் வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையுறு செய்கின்றன.

தொடர்ந்து நடவடிக்கை வேண்டும்

தமிழகத்தில் ஆங்காங்கே மாடுகளால் தொடர்ந்து விபரீதம் ஏற்படுகின்றன.    நாகை மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மகன் சபரிராஜன் (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் மேலகோட்டை வாசல் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக சென்ற மாடு அவரை முட்டியுள்ளது. இதில் தடுமாறி கீழே விழுந்த சபரிராஜன் மீது எதிர்புறம் வந்த அரசுப் பேருந்தின் பின்புறம் சக்கரம் ஏறி,  இறங்கியது.  இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலும்,  வேலூர் மாநகராட்சி  போக்குவரத்து சாலைகளில் மாடுகள் உலாவருகின்றன. 

மேயரின் எச்சரிக்கை பெயரளவில்தானா?    எச்சரிக்கை விடுப்பது மட்டும் கடமை என்று உள்ளனரா?  கண்காணிப்பதும் கடமை என்பதை மறந்துவிட்டாரா?  என கேள்விகள் எழுகிறது.

சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூறு மட்டுமின்றி பொதுமக்கள் அச்சத்தால் அவதியுறுகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாநகராட்சி தொடர் கவனம் செலுத்த வேண்டும். நடவடிக்கை என்கின்ற பெயரில் ஒருநாளில் முடித்து விடக்கூடாது.   மாநகராட்சி அலுவலர்கள்  இதில் நடவடிக்கை எடுத்து பணியாற்றினாலே போதும் என்கின்றனர் பொதுமக்கள். 

இதில் தீவிர கவனம் செலுத்துவார்களா, பொதுமக்கள் அச்சத்தை போக்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

No comments

Thank you for your comments