வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் இலவச கழிவறை- தொற்நோய் பரவும் அபாயம்
வேலூர், நவ.21-
இலவச கழிவறை
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் நுழைந்தவுடன் இடதுபுறம் திறந்தவெளி இலவச சிறுநீர் கழிவறை உள்ளது. சிறுநீர் கழிக்க பயன்படுத்தப்படும் இந்த கழிவறை சுகாதாரம் இன்றி பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வளாகமாக உள்ளது.
பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் உள்ளிட்டோர் இந்த இலவச கழிவறையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் கழிவறையை பயன்படுத்திய பின்னர் சுத்தம் செய்ய தண்ணீர் இருக்கிறதா என்றால், இல்லை.
முகம் சுழிக்க வைக்கிறது
இதற்கு அருகில் சற்று துரத்தில் தான் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் நிலையத்திற்குள் நடந்து வருபவர்களும், வாகனங்களில் வருபவர்களும் அதன் அருகில் கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது துர்நாற்றம் கடுமையாக வீசுகிறது. இதனால் அதன் அருகில் கடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.
கழிவறையின் சற்று தூரத்தில் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் உட்கார்ந்தாலும் கழிவறை துர்நாற்றம் அங்கிருந்து எழுந்து ஓட வைக்கிறது.
நோய் பரவும் அபாயம்
இதுபோன்ற கழிவறைகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். பெரியவர்களே இவ்வாறு அவதிப்பட்டால் சிறுவர்களுக்கு கேட்கவா வேண்டும்?
இன்னும் சில பயணிகள் கழிவறையை பயன்படுத்தாமல் அருகில் உள்ள வெளிப்புறத்தையும் பயன்படுத்தி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறார்கள்.
புதிய புதிய நோய்கள் வருகை தந்து மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வேளையில் இதுபோன்ற கழிவறைகளால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச கழிவறை என்பது பஸ்நிலையத்தில் மக்களுக்கு தேவையான ஒன்று, அவசியமான ஒன்று தான். ஆனால் அதனை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை ஆகும்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு பாதிப்பின்றி இலவச கழிவறைகள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.


No comments
Thank you for your comments