தள்ளுபடி எதிர்பார்ப்புடன் கடனை வாங்க கூடாது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர், நவ.20-
கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடனை பெற்றால் மக்கள் அதனை திருப்பி கட்ட வேண்டும் அப்போது தான் கூட்டுறவுத்துறையும் அரசாங்கமும் சரியாக இயங்கும், கடனை கட்டவில்லை என்றால் கூட்டுறவுத்துறையே இருக்காது கடன் தள்ளுபடி என எப்போதும் எதிர்பார்ப்புடன் மக்கள் கடனை வாங்க கூடாது.- நீங்கள் எள் என்றால் கூட்டுறவுத்துறை உடங்களுக்கு எண்ணெய்யாக தருகிறது என்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், காட்பாடி ஸ்ரீ ரங்காலயா திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
நீர்வளத்துறை அமைச்சர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2547 பயனாளிகளுக்கு ரூ. 17.42 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மேலும் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் கூட்டுறவு விழாவிற்கான உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இது ஒரு விழாவாக மட்டும் அல்லாமல் மாணவ மாணவியர்களிடையே அறிவினை வளர்க்கும் விதமாக பேச்சுப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுவதுண்டு.
நான் பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும், பின்பு மாநிலக் கல்லூரியிலும் கல்லூரி படிப்பை பயிலும் பொழுது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் எனக்கே உண்டு. இவ்வாறு போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கூட்டுறவின் நோக்கம் மற்றும் கூட்டுறவின் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்ள உதவுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையின் மூலம் வேளாண் சேவை மையம், வேளாண் மருத்துவ மையம், பொது சேவை மையம், கூட்டுறவு மருந்தகங்கள், பண்ணை பசுமை காய்கறி அங்காடிகள் போன்ற பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவுத் துறையின் முக்கியமான ஒரு பணி பொது விநியோகத் திட்டம். மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்வதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும், அவர்களுக்கு பகுதிநேர நியாய விலை கடைகளை வசிக்கும் பகுதியிலேயே திறந்து வைக்க கோரிக்கைகளையும் வைத்து வந்தனர். நாம் பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் நீண்ட தொலைவிற்கு சென்று பொருட்களை வாங்கும் நியாயவிலை கடைகளை பிரித்து பகுதிநேர நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், மகளிர் மற்றும் இதர பிரிவினர் கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி பெறும் பொழுது அந்த கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கடன்களை பெற்று நல்ல முறையில் தொழில் புரிய வேண்டும். இன்றைய தினம் வேலூர் மாவட்ட கூட்டுறவு துறையின் மூலம் 2547 பயனாளிகளுக்கு ரூபாய் 17.42 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. கடனுதவிபெறுகின்ற பயனாளிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் தன்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து.மு. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப. கார்த்திகேயன், அமுலு விஜயன், அ.செ.வில்வநாதன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் மா. சுனில் குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வேல்முருகன், ரவிச்சந்திரன், சத்யானந்தம், வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ச. திருகுண ஐயப்பதுரை, இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நர்மதா, துணை பதிவாளர்கள் தே.வே.சுரேஷ் குப்தா, சுவாதி, வே. அழகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments