காஞ்சிபுரம் ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், நவ.23:
காஞ்சிபுரம் செவிலிமேடு அம்பேத்கர் நகரில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீகெங்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் செவிலிமேடு அம்பேத்கர் நகரில் வசித்து வந்த முன்னோர்கள் பல ஆண்டுகளாக கெங்கையம்மனுக்கு சிறியதாக ஆலயம் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். அதே ஆலய வளாகத்தில் துலுக்கானத்தம்மனும் அருள்பாலித்து வந்துள்ளார்.தற்போது அப்பகுதி பொதுமக்களால் ஆலயத்திற்கு இரண்டு நிலை ராஜகோபுரம்,அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியன புதியதாக கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோ பூஜை மற்றும் திருவிளக்கு வழிபாடு ஆகியனவற்றுடன் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக 22 ஆம் தேதி புதன்கிழமை சிவசூரிய பூஜை,பஞ்சகவ்ய பூஜை,லலிதா சஹஸ்ர நாம ஹோமம் ஆகியன நடைபெற்றது.
வியாழக்கிழமை நியாதி ஹோமம், தம்பதிகள் பூஜை ஆகியன நடைபெற்று மகா பூர்ணாகுதி தீபாரதனைக்குப் பிறகு சிவாச்சாரியார்களால் புனிதநீர்க் குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் வாணியம்பாடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலய ஸ்தானீகர் என்.விஜய குமார் சர்மா மற்றும் காஞ்சிபுரம் பிரபு ஐயர் ஆகியோரால் நடைபெற்றன.
விழாவில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்,அதிமுக இளைஞர் அணியின் மாவட்ட தலைவர் திலக்குமார்,காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் மதியழகன்,காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக் குழுவின் தலைவர் செவிலிமேடு மோகன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் மூலவர்களான கெங்கையம்மனுக்கும், துலுக்கானத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக திருப்பணி விழாக்குழுவினர் மற்றும் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments