Breaking News

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் கல்லூரிக்கனவு கருத்தரங்கம்

காஞ்சிபுரம், நவ.23:-

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக்கனவு நிகழ்ச்சிக்கான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம் : கருத்தரங்கில் பங்கேற்ற பள்ளியின் பொறுப்பாசிரியரிடம் பங்கேற்புச் சான்றிதழும் நினைவுப்பரிசும் வழங்கும் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிக்கனவு என்ற நிகழ்ச்சி காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் கருத்தரங்கமாக நடைபெற்றது.

பல்வேறு அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் சங்கரா கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு கல்லூரியில் உள்ள படிப்புகள், ஆய்வுக்கூடங்கள்,நூலகம்,சமுதாய வானொலி நிலையம் ஆகியனவற்றை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும் எந்தப் படிப்பு படித்தால் என்ன வேலைக்கு போகலாம் என்ற வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்கள், கல்வி உதவித்தொகைகள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.

கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் ம.கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் ஆர்.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.வணிகவியல் துறை பேராசிரியர் கே.ஏ.குஞ்சிதபாதம் சமூக வளர்ச்சியில் வணிகவியலின் பங்களிப்பு என்ற தலைப்பிலும் தமிழ்த்துறைப் பேராசிரியர் தெய்வசிகாமணி கல்வி அழகே அழகு என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் எழுதுபொருட்கள் அடங்கிய கோப்புகளும் வழங்கப்பட்டன.நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரியா நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments