Breaking News

ஸ்ரீகாமாட்சி அம்மன் அவதார தின விழா - கொட்டும் மழையிலும் பால்க்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

காஞ்சிபுரம், நவ.7:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவதார தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்த நிலையிலும் கோயில் பணியாளர்களும்,பக்தர்கள் பலரும் பால்க்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு தங்களது நேரத்திக்கடனை செலுத்தினார்கள்.


படவிளக்கம் : காமாட்சி அம்மனின் அவதார தினத்தையொட்டி பால்க்குடம் எடுத்து வந்த கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களை படத்தில் காணலாம்.


ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்திர நாள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார தினமாகும். இந்நாளில் காஞ்சி காமாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பணிபுரியும் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பால்க்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு ஆபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

செவ்வாய்க்கிழமை பூர நட்சத்திரத்தையொட்டிசங்கர மடத்திலிருந்து கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களின் பால்க்குட ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் பக்தர்களுக்கு பால்க்குடங்களை வழங்கி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.ஊர்வலம் மடத்திலிருந்து புறப்பட்டதும் பலத்த மழை பெய்தது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பணியாளர்களும், பக்தர்களும் தலையில் பால்க்குடங்களை சுமந்து கொண்டேநகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்து சேர்ந்தனர். ஊர்வலத்தில் கோயில் மணியம் சூரியநாராயணன்,ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள்,மடத்தின் மேலாளர் கீர்த்தி வாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்மனுக்கும் கோயில் கருவறையில் உள்ள பிலகாசத்துக்கும் பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

பின்னர் மூலவர் காமாட்சி அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

அவதார தினத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள பூரம் மண்டபம் எனப்படும் 4 கால் மண்டபத்துக்கு எழுந்தருளியதும் கோயில் ஸ்தானீகர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.பின்னர் அம்மன் அங்கிருந்து தங்கத்தேரில் கோயில் வளாகத்தில் பவனி வந்து அலங்கார மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.



No comments

Thank you for your comments