Breaking News

காஞ்சிபுரத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கையில் மண்பானையுடன் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், நவ.6:

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கையில் மண்பானைகளையும்,மண் அடுப்புகளையும் வைத்துக்கொண்டு மண்பாண்டத் தொழிலாளர் குலாலர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் குலாலர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மண்பாண்டத் தொழிலாளர்கள் கைகளில் மண்அடுப்புகள், மண் பானைகள் ஆகியனவற்றுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையின் போது இலவசமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வேட்டி, சேலை,ரொக்கம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்டவை அடங்கிய பரிசுப்பொருளை ஆண்டு தோறும் வழங்குகிறது.பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதார்கள் அனைவருக்கும் இலவசமாக பொங்கல் வைக்க மண் அடுப்பும், புதிய மண்பானையில் பொங்கலிட மண்பானையும் இணைத்து வழங்கிட வேண்டும்.

மண்பானையும்,மண் அடுப்பும் பொங்கல் பரிசோடு இணைந்து வழங்கினால் தமிழகத்தில் வசிக்கும் குலால சமூக மக்கள் சுமார் 40லட்சம் பேரும் பயனடைவார்கள்.நலிந்த நிலையில் உள்ள மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி வீச தமிழக அரசு பொங்கல் பரிசுடன் மண்பானையும், மண் அடுப்பும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாநில துணைத் தலைவர் ஏ.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மணி,மாவட்ட பொருளாளர் கே.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம் : காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மண்அடுப்பு மற்றும் மண்பானைகளை கைகளில் ஏந்திக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள்

No comments

Thank you for your comments