Breaking News

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு காஞ்சிபுரம் மாலைகள்

காஞ்சிபுரம், நவ.25:

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது உற்சவர்கள் அருணாசலேசுவரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் அணிவிப்பதற்காக காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட மாலைகளுக்கு சனிக்கிழமை சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் ஜவுளி வியாபாரிகள் சத்திர தரும பரிபாலன சபை செயல்பட்டு வருகிறது. இச்சபையின் சார்பில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் உற்சவர்களுக்கு அணிவிப்பதற்காக காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட மாலைகள் ஆண்டு தோறும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்படும் மாலைகள் காஞ்சிபுரம் ஜவுளிக்கடை சத்திரத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஜவுளிக்கடை சத்திர தரும பரிபாலன சபையின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து சபையின் தலைவர் வி.கே.குமாரகாளத்தி கூறியது.

கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக பல லட்சம் மதிப்பில் மாலைகள் தயாரிக்கப்பட்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  விழாவில் உற்சவர்கள் அருணாசலேசுவரருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் இம்மாலைகள் அணிவிக்கப்பட்டு வீதியுலா வருவார்கள். 

ஒரே நாளில் மாலை தயாரிக்கும் கலைஞர்கள் 42 பேர் இணைந்து இம்மாலைகளை உருவாக்கி இருப்பதாகவும், சனிக்கிழமை இரவே இவை அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  சபையின் செயலாளர் பி.மாணிக்கவேலு,பொருளாளர் பி.அருண்குமார்,இணைச் செயலாளர் தணிகைவேல் ஆகியோரும் உட்பட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

படவிளக்கம் : திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் உற்சவர்களுக்கு அணிவிக்க அனுப்பி வைக்கப்படவுள்ள மாலைகளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை

No comments

Thank you for your comments