நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் வெற்றி பாராட்டுக்குரியது - ஜி.கே.வாசன் புகழாரம்
காஞ்சிபுரம், நவ.20-
காஞ்சிபுரத்தில் கட்சிப்பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக சொல்லி வருவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழக மாணவர்கள் அதிகமான அளவில் வெற்றி பெறுவது பாராட்டுக்குரியது. அறிவுக்கூர்மை உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு நீட் தேர்வு ஒரு சிறந்த உதாரணம்.ஆனால் திமுக நீட் தேர்வுக்காக கையெழுத்து இயக்கத்தை நடத்தி மாணவர்களையும், மக்களையும் குழப்பத்தில் தள்ளுகிறது.
நீட் தேர்வை ரத்து செய்வதாக இருந்தால் மக்களவையில் வெற்றி பெற்று அதன் மூலம் ரத்து செய்யலாம்.அது இப்போது முடியாது.உச்ச நீதிமன்றத்தை நாடியாவது தீர்ப்பை வாங்கியிருக்க வேண்டும்.இந்த இரண்டையும் செய்யாமல் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்பது கல்வியில் அரசியலை புகுத்த நினைப்பதாகவே பொருளாகும்.பசுத்தோல் போர்த்திய புலியாக திமுக செயல்பட்டு வருகிறது.ஆளுநர்களும், ஆட்சியாளர்களும் அவரவர்களது கடமையை சரியாக செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மக்களவைத் தேர்தலுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் கட்சியை பலப்படுத்துவதற்காக நாங்களும் மக்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு ஏற்றவாறு செயல்படுவோம்.காஞ்சிபுரத்தில் இரண்டாவது பேருந்து நிலையத்தை விரைவாக அமைக்க வேண்டும்.பயிர்க்காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும். காஞ்சி புரத்தில் விரைவாக மருத்துவக்கல்லூரியும்,சிற்றுந்து வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
பேட்டியின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் மலையூர்.வி.புருஷோத்தமன், ஜி.கே.கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments