இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி - உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
அகமதாபாத், நவ.19-
உலக கோப்பை
உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டு மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்தியா
முதலில் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில், 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார் ரோகித் சர்மா. அவர் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹெட் அபார கேட்ச் பிடித்து ரோகித்தை வெளியேற்றினார். ஸ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் அவுட் ஆனார்.
3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தனர்.
கோலி 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் விக்கெட்டை இழந்த விதம் துரதிருஷ்டவசமானது. பின்னர் வந்த ஜடேஜா 14 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
240 ரன்கள்
மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அவர் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து ஷமி மற்றும் பும்ரா ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது.
சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு பந்தை மிகவும் நிதானமாக வீசி இருந்தனர் ஆஸ்திரேலிய பவுலர்கள்.
50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி.
முதல் முதலாக
முதல் முறையாக இந்த தொடரில் ஆல் அவுட் ஆகியுள்ளது இந்தியா. ஸ்டாரக் 3 விக்கெட்கள், கம்மின்ஸ் மற்றும் ஹேஸசில்வுட் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
மேக்ஸ்வெல் மற்றும் ஸாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆகி வெளியேறி இருந்தார்.
ஆஸ்திரேலியா
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடியது.
டேவிட் வார்னர் மற்றும் ஹெட் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் ஓவரில் 15 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இருந்தும் ஷமி வீசிய அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து பும்ரா வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆட்டமிழந்தனர். 47 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.
வெற்றி
அந்த இக்கட்டான சூழலில் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஹெட் மற்றும் லபுஷேன். இந்த ஜோடி நங்கூரம் போல் நின்று ரன் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இருவரும் அபாரமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். பந்துகளை வீணடிக்காமல் விளையாடினர். மாறி மாறி இந்திய பவுலர்கள் பந்து வீசியபோதிலும் இந்த ஜோடியின் விக்கெட்டுகளை உடனே கைப்பற்ற முடியவில்லை. இதனால் அந்த அணியின் வெற்றி 40 வது ஓவரிலேயெ ஓரளவு உறுதியானது.
டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுபக்கம் லபுஷேன் அரை சதம் கடந்தார். 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் என்ற இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. மேக்ஸ்வெல் வெற்றிக்கான அந்த 2 ரன்களை ஸ்கோர் செய்தார்.
இந்திய அணி தோல்வியடைந்ததை ஒட்டி, ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.33.18 பரிசு
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.33.18 கோடியும், இரண்டாம் இடம் வென்ற இந்திய அணிக்கு ரூ.16.59 கோடியும் பரிசு கிடைத்தது.
உலககோப்பை தொடரில் கோலி அதிக ரன் குவித்த வீரர் ஆவார். அதிக விக்கெட்டை வீழ்த்திய பெருமையை முகமது ஷமி பெற்றார்.
Forever etched in history 😍#CWC23 pic.twitter.com/ofHuu9mVY0
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023
Celebrations in the Aussie camp! 🎉#CWC23 #INDvAUS pic.twitter.com/qTHNfXXPxG
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023
The winning moment 🤩 🇦🇺#CWC23 #INDvAUS pic.twitter.com/6p4R3g7H2o
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 19, 2023

No comments
Thank you for your comments