காஞ்சிபுரத்தில் 36,380 மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
காஞ்சிபுரம், நவ.10-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 36,380 மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2வது கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. எம்பி டி.ஆர்.பாலு, எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்றத்தூர் ஒன்றியத்தின் தலைவர் சரஸ்வதி மனோகரன் வரவேற்று பேசினார்.
விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகைக்கான பற்று அட்டைகளை வழங்கி பேசியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த செப்.15 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளன்று 22700 மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
இது தவிர 22700 பேர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதனை கள ஆய்வு செய்து 13680 பேருக்கு தற்போது 2வது கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36,380 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் முதன்முறையாக 1,649,242 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கடந்த செப்.15 ஆம் தேதி வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக 7,13,058 பேருக்கு இந்த மாதம் முதல் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1.13கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13515 விவசாயிகளுக்கு 89.41கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்திருப்பதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சா.செல்வக்குமார், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் துணைத்தலைவர் உமாமகேசுவரி உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments