Breaking News

ரெயில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

திருவள்ளூர், நவ.19-

திருவள்ளூர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இருமகள்கள் என 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

மருத்துவமனைக்கு சென்றனர் 

திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 48). இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பகல் 12 மணி அளவில் அவர் தனது மகள்களான தர்ஷினி (18), தாரணி (17) ஆகியோரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு செல்வதற்காக வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

ரெயில் மோதி பலி

இதற்காக அவர்கள் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விசாரணை

இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரெயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து திருவள்ளூர் ரெயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இருமகள்கள் உயிரிழந்த சம்பவம் பெருமாள்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நகரும் படிக்கட்டு

சென்னையிலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, பட்டாபிராம் மார்க்கமாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு ரெயில் நிலையங்களில் லிப்ட் வசதியோ, நகரும் படிகட்டுகளோ இருப்பதில்லை.

எனவே மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தண்டவாளத்தை கடந்து எளிதாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் இது சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

சாலைமறியல்

மேலும் வேம்பம்பட்டியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இந்த பணிகள் முடிவு பெறாததால் மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த உயிரிழப்புக்கு ரெயில்வே துறையின் மெத்தன போக்குதான் காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments