குமரகோட்டம் முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம், நவ.19:
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா இம்மாதம் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரசம்ஹாரம் சனிக்கிழமை ஆலயத்தின் முன்பாக நிறைவு பெற்றது.
இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் அமைந்துள்ள முன்மண்டபத்தில் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தையொட்டி அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல்,தேங்காய் உருட்டல் உள்ளிட்டவை ஆகம விதிகளின்படி கோயிலின் தலைமை பூஜகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன.
பின்னர் திருமாங்கல்யம் அணிவித்தலும்,மாலை மாற்றல் வைபவமும் நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர் வெள்ளைச்சாமி, காஞ்சிபுரம் காந்தி சாலை ஜவுளிவியாபாரிகள் சத்திர தரும பரிபாலன மகிமைச் சங்க நிர்வாகிகள் உட்பட பக்தர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
திருமணத்தை தொடர்ந்து யானைவாகனத்தில் திருக்கல்யாண திருக்கோலத்தில் முருகப்பெருமான் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

No comments
Thank you for your comments