Breaking News

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடுதோறும் பணியாளர்கள் ஆய்வு - கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர், அக்.1-

வேலூர்  மாவட்டத்தில்  டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள் தோறும் ஆய்வு செய்ய  வரும்   பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ள 37 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்  என  மாவட்ட  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

கூட்டம்

வேலூர்  மாவட்டத்தில்  ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட  கலெக்டர் பெ. குமாரவேல் பாண்டியன்  தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் அவர் பேசியதாவது-

  ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 521 கொசு ஒழிப்பு பணியாளர்கள்  மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,  25 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் எந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் எந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

களப் பணியாளர்கள்

குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள்  ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் எந்திரங்கள் கொண்டு  கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. 

திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் களப் பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

கொசுப்புழு 

மழை அவ்வப்பொழுது பெய்து வருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது.  எனவே,  பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள்{கொட்டாகுச்சி}உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்டு தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

 டெங்கு காய்ச்சல் பிரிவு

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பிரிவு தனியாக தொடங்கப்பட வேண்டும். அனைத்து புறநோயாளிகள் பிரிவிலும் பொதுமக்களுக்கு தேவையான  ஓ.ஆர்.எஸ்  சத்துநீர் கரைசல் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியும் எலிசா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவர்கள் பயிலும் பள்ளி மற்றும் வசிக்கும் பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரி

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும்,  வியாழக்கிழமை அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அரசு கட்டிடங்கள் உள்ள இடங்களிலும் பணியாளர்கள் ஆய்வு செய்து தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து  சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். 

மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேவையற்ற டயர்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட வேண்டும்.

மருத்துவ முகாம்

மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் இன்று  மொத்தம் 37 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடம் ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகள் மற்றும் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்ட இடங்களில் இருப்பதை மருத்துவ அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எனவே வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


🔥  கிராம சபை - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் சுவாரஸ்யமான வரலாறும்.. வேண்டுகோளும்..





No comments

Thank you for your comments