தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை துவக்கம் - சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிபாக்கம் கதர் அங்காடி விற்பனை நிலையத்தில் 2023-ம் ஆண்டு அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்த தின விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை துவக்க விழாவினை இன்று (02.10.2023) காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
காந்தியடிகள் எழுதிய சுயராஜ்யம் என்ற நூலில் இந்தியாவில் இந்திய மக்களை வாட்டிடும் வறுமையைப் போக்குவதற்கு சரியான மருந்து கைராட்டினமே என்று கூறியுள்ளார். அதன்படி இந்தியாவிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வளிப்பது கதர் நூற்பும், நெசவும் ஆகும். அதுமட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு உண்ணா எண்ணெய்யிலிருந்து சோப்பு தயாரித்தல் (சலவை சோப்பு மற்றும் குளியல் சோப்பு) ஊதுபத்தி, ஜவ்வாது, மெழுகுவர்த்தி தயாரித்தல், தேன் சேகரித்தல் போன்ற தொழில்கள செய்தும். அதனைச் சார்ந்து உபதொழில்கள் செய்வோருக்கு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ஆதரவு அளித்து வருகிறது.
கதர் துணியின் உற்பத்தி மற்றும் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற கிராமப் பொருட்களின் பயன்பாட்டினையும் அதிகரித்து விற்பனை செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள கதர் அங்காடி செயல்பட்டு வருகிறது. கதர், பட்டு, உல்லன் மற்றும் பாலிஸ்டர் இரகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளன. கதர் இரகங்களுக்கு 30% தள்ளுபடியும், பட்டு இரகங்களுக்கு 30% தள்ளுபடியும், உல்லன் இரகங்களுக்கு 20% தள்ளுபடியும், பாலிஸ்டர் இரகங்களுக்கு 30% தள்ளுபடியும் அறிவித்துள்ளன.
மேற்குறிப்பிட்ட கதர் இரகங்களுடன் கிராமப் பொருட்களான தேன், ஜவ்வாது, சோப்பு வகைகள், சாம்பிராணி வகைகள், வலி நிவாரணி தைலம், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, மூலிகை பற்பொடி மற்றும் பனை பொருட்களான சுக்கு காபி பவுடர், பனை வெல்லம் மிட்டாய் சுத்தமான பனங்கற்கண்டு மரசெக்காலான உற்பத்தி செய்யப்பட்ட கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய், பாரம்பரிய அரிசி வகைகள், சாமை, திணை, குதிரைவாலி, சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் நடப்பு ஆண்டு முதல் ODOP மூலம் கிராமப் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிக கலப்படமில்லாத நாட்டுச்சர்க்கரை, கொடி வகைகள் (உண்ணும் இரகம்) இயற்கை பொடி வகைகள் துவைக்கும் சோப்பு திரவங்கள் மற்றும் பினாயில்கள், மெத்தை இணைந்த கோரைப்பாய்கள் பிளாஸ்டிக் பாய்கள், பந்தி பாய்கள் மற்றும் தேங்காய் நார் மிதியடிகள் போன்ற பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுகாவேரிப்பாக்கத்தில் கதர் அங்காடி செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.200.00 இலட்சம் கதர் இரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் இந்த ஆண்டிற்கு 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.300.00 இலட்சம் மதிப்பிலான கதர் இரகங்கள் விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு 2023-ல் தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பிக்கப்பட:டுள்ளது. எனவே கதர் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.300.00 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்களுக்கு சுலப தவணையில் கதர் இரகங்கள் வழங்கப்பட்டு வருவதால் அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி பயனடையுமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments