Breaking News

காஞ்சிபுரத்தில் கைத்தறி கண்காட்சி தொடக்க விழா - எம்எல்ஏ திறந்து வைத்து பார்வையிட்டார்

காஞ்சிபுரம்,  அக்.18:

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சியை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார்.




மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் சார்பில் காதி மகோற்சவம் என்ற பெயரில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சி அக்.18 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்தில் பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைத்தறிக் கண்காட்சியை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சி தொடக்க விழாவிற்கு நெசவாளர் சேவை மையத்தின் மண்டல உதவி இயக்குநர் ஆர்.சசிகலா தலைமை வகித்தார்.கைத்தறி அலுவலர் எம்.நாகராஜன்,தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக உதவி மேலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கடலூர், கரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி, பரமக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கைத்தறி நெசவாளர்கள் தங்களது பொருட்களை அரங்குகளாக அமைத்திருந்தனர். 

கைவினைப் பொருட்கள்,பட்டுச் சேலைகள்,கதர்வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள், மூலிகை மற்றும் பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இது குறித்து சேவைமைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறுகையில் இந்தியா முழுவதும் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இம்மாதம் 18 முதல் 23 ஆம் தேதி வரை தொடர்ர்ந்து 5 நாட்களுக்கு கண்காட்சி நடைபெறுகிறது.

தமிழகத்தில் திருச்செங்கோடு, காஞ்சிபுரம்,திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் கண்காட்சி நடந்து வருகிறது.

இக்கண்காட்சியில் பொருட்கள் தள்ளுபடியில் குறைந்த விலைக்கு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments