Breaking News

காஞ்சிபுரம் தேசிகன் கோயிலில் தேரோட்டம்


படவிளக்கம்: புரட்டாசித் திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் முன்பாக வந்த தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் தேரோட்டம்


காஞ்சிபுரம், செப்.22-

காஞ்சிபுரம் வேதாந்த தேசிகன் கோயிலில் புரட்டாசித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் வேதாந்த தேசிகன் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக் கோயிலில் வேதாந்த தேசிகனின் புரட்டாசி மாத வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. 

விழாவையொட்டி தினசரி காலையில் பல்லக்கிலும்,மாலையில் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகியும் தேசிகன் சுவாமிகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது.தேசிகன் சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் தேரிலும் மாலையில் ராமர் திருக்கோலத்திலும் வீதியுலா வந்தார்.

விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான விளக்கொளிப் பெருமாள் மங்களாசாசனம் வரும் 25 ஆம் தேதியும், இரவு பூப்பல்லக்கில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி சந்நிதிக்கு எழுந்தருளி மங்களாசாசனமும் நடைபெறுகிறது.

மறுநாள் 26 ஆம் தேதி கந்தப்பொடி வசந்தம் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


No comments

Thank you for your comments