புரோகிதர்களை தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் - சங்க கூட்டத்தில் தீர்மானம்
படவிளக்கம் : சங்கத்தின் ஆண்டு விழாவில் பேசுகிறார் சேங்காளிபுரம் பி.தாமோதர தீட்சிதர்
காஞ்சிபுரம்,செப்.22:
தமிழக அரசு புரோகிதர்களை அமைப்பு சாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய புரோகிதர்கள் சங்க ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் 65 வது ஆண்டு தொடக்க விழா அச்சங்க சமூக நல அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.அஸ்வினி சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் டி.எஸ். ரோகினி சாஸ்திரிகள்,துணைச் செயலாளர் வி.ஆர்.ரமேஷ், பொதுச்செயலாளர் பி.ஆர்.பால சுப்பிரமணிய கணேஷ், பொருளாளர் பி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் எஸ்.குஞ்சிதபாதம் வரவேற்று பேசினார்.
சேங்காளிபுரம் பி.தாமோதர தீட்சிதர், சங்கத்தின் கௌரவத்தலைவர் ராணிப்பேட்டை பாரதி முரளீதர சுவாமிகள் ஆகியோர் சங்கத்தின் தீர்மானங்களை விளக்கி பேசினார்கள்.
இவ்விழாவில் மத்திய அரசு அறிவித்திருப்பதைப் போல தமிழக அரசும் புரோகிதர்களை அமைப்பு சாரா தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும், கல்வியிலும், வேலையிலும் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீத்தார் கடன்களை செய்வதற்கு தமிழக அரசே கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், பிரதம மந்திரி இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புரோகிதர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பன உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விழாவில் காஞ்சிபுரம் வி.சந்திரேகர்,மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் ஆர்.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உட்பட தமிழகம் முழுவதுமிருந்து திரளான புரோகிதர்கள் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் என்.ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

No comments
Thank you for your comments