காஞ்சிபுரத்தில் உலக சுற்றுலா தின விழா விழிப்புணர்வு பேரணி - கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன
காஞ்சிபுரம்,செப்.27:
சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி புதன்கிழமை சுற்றுலா விழிப்புணர்வு பேரணியும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி காஞ்சிபுரம் அண்ணா அரங்கிலிருந்து சுற்றுலா விழிப்புணர்வு பேரணி தொடங்கி கைலாசநாதர் கோயிலில் வந்து நிறைவு பெற்றது.பேரணி தொடக்க விழாவில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், மாநகர் நல அலுலவர் அருள்நம்பி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கைலாசநாதர் கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பச்சையப்பன் கல்லூரி மகளிர் கல்லூரி மாணவியர்களால் தூய்மைப்பணிகளும் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பரதநாட்டியம்,தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சுற்றுலா தினத்தையொட்டி பல்வேறு பள்ளி,கல்லூரிகளில் நடைபெற்ற கட்டுரை,பேச்சு,ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 15 பேருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு சுற்றுலா அலுவலர் த.சக்திவேல் தலைமை வகித்தார்.
உதவி சுற்றுலா அலுவலர் சரண்யா முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆலயம் அமைப்பின் உணவக பொது மேலாளர் ஜான்ராவ்,தனியார் நட்சத்திர விடுதி மேலாளர் இளமாறன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.சுற்றுலா வழிகாட்டி மகேஷ் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments