Breaking News

தேவையில்லாத நீர் தேக்க பாத்திரங்கள் வைத்திருப்பதை தவிர்க்கவும் - மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வேண்டுகோள்

காஞ்சிபுரம், செப்.23-

பொதுமக்களுக்கு ஓரு வேண்டுகோள், பருவமழை பெய்வதால், தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள், பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகி விடுகிறது.  தேவையற்ற பொருட்களான தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள், உடைந்த பாத்திரங்கள் போன்ற பொருட்களை வீட்டை சுற்றி போட்டு வைப்பதால் டெங்கு பரப்பும் சூழலை நாம் தோற்றுவித்து விடுகிறோம்.  

வீட்டை சுற்றிலும் பழைய பொருட்கள், தேவையில்லாத நீர் தேக்க பாத்திரங்கள் வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் மழைநீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் உடன் உருவாகிறது. இந்த அமைப்பின் மூலம் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகிவிடும். மேற்கண்ட பொருட்களை அகற்றுவதின் மூலம் டெங்கு காய்ச்சல் நிகழ்வுகளை முற்றிலும் தவிர்க்க முடியும். 

 சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாகவே ஓரிரு நாட்களில் குணமாகிவிடும்.  ஆனால் மலேரியா காய்ச்சல், எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.  மருத்துவ சிகிச்சை தாமதமானாலோ சுயமாக மருந்துகள் சாப்பிட்டாலோ போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல் நலம் கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும்.  

உரிய சிகிச்சையும் முறையான கவனிப்பும் கொடுத்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம்.  டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடும்.  உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர் காக்கும் ஓஆர்எஸ் போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும்.

ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிடுவோம்.  தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைப்போம்.  பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க  வைப்போம்  டெங்கு காய்ச்சலை தவிர்ப்போம் என  மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments