தாய்-மனைவி-மகள் குறித்து - மு.க.ஸ்டாலின் உருக்கம்
காஞ்சிபுரம் :
'உங்கள் மனைவி வேலைக்கு போகிறார்களா?' என்று கேட்டால், “இல்லை” என்று மட்டும் சொல்லாமல் “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வார்கள்.
வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.
தாய்-மனைவி
தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு, இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை. உண்மையில், உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும்தான்.
என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக்கொள்வார். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறு சிறு சம்பவங்களைகூட துவக்க காலத்தில் என் அம்மாவிடம் சொல்லித்தான், தலைவர் கலைஞரிடம் சொல்லச் சொல்வேன். இன்றைக்கு அவர் வயது முதிர்ந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். நான் சென்று பார்க்கின்றபோது என் அம்மா முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது.
என்னுடைய பாதி
அதேபோலதான் என்னுடைய மனைவி துர்காவும். என்னுடைய பாதி என்று சொல்கின்ற அளவுக்கு என்கூட இருக்கிறார். திருமணமாகி ஐந்தாவது மாதத்தில் மிசாவில் நான் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், இயல்பு என்று புரிந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார்.
என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு – பள்ளங்கள். எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது என்னுடைய மனைவி துர்கா அவர்கள்தான்.
அன்பின் வடிவம்
அடுத்து, என்னோட மகள் செந்தாமரை. அவர் அன்பின் வடிவம் என்று தான் சொல்லமுடியும். நான் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தான் உண்டு, தன்னுடைய வேலைகள் உண்டு என்று அவர் இருப்பார். ஒரு அரசியல்வாதியினுடைய மகள் என்ற சாயல் தன் மேல் விழுந்துவிடக் கூடாது என்று உன்னிப்பாக அதில் உஷாராக இருப்பார். சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.
கருணைமிகு தாய் - தூணாக விளங்கும் மனைவி - தன்னம்பிக்கை கொண்ட என்னுடைய மகள் – இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதே மாதிரியான பேருள்ளம் கொண்டவர்கள்தான் நீங்கள் எல்லோரும். மகளிர் அனைவரும். இத்தகைய மகளிரின் நலம் காத்த மாண்பாளர் என்றால் நம்முடைய தலைவர் கலைஞர் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
.jpg)
No comments
Thank you for your comments