Breaking News

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்.செப்.15-

காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


திட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 1 கோடியே  6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இத்திட்ட தொடக்கத்தில் அடையாளமாக 13 மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

நிதிநிலை அறிக்கையில்...

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் கலைஞர் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் தர்மபுரி  மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப்பயனாளிகளின்  விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை  24.7.2023 அன்று தொடங்கி வைத்தார்.

விண்ணப்பம்

இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.7.2023 முதல் 4.8.2023 வரை முதல் கட்டமாகவும்,  5.8.2023 முதல் 14.8.2023 வரை இரண்டாவது  கட்டமாகவும் மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும்  விடுபட்டவர்களுக்கு 18.8.2023 முதல் 20.8.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள்  பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வந்துள்ளது. அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

விண்ணப்பதாரர்களின்  விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.9.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். 

இன்று இந்த திட்ட ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கலந்து கொண்டவர்கள்

இதில். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர்  ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், கு. செல்வப்பெருந்தகை, இ.கருணாநிதி,வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர். ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, வளர்ச்சி ஆணையர்-முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் க.இளம்பகவத், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன்,வங்கிகளின் உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments