உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று குறித்து ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உத்திரமேரூர் பகுதியில் உணவு பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாமக்கலில் 13 வயது பள்ளி சிறுமி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிரடி ஆய்வுகள் உணவகங்களில் நடைபெற்று வருகிறது.
மேலும் அனைத்து வகை வியாபாரிகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு அளிக்க உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
அவ்வகையில் இன்று உத்திரமேரூர் பகுதி அனைத்து வியாபாரிகள் முன்னேற்றம் சங்கம் சார்பில் உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் மட்டும் விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் கீழ் உணவு வணிகம் செய்வோர் அனைவரும் அரசு உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெற்றிருத்தல் கட்டாயம் என்றும் ஏற்கனவே பெற்று இருந்தால் முறையாக புதுப்பித்தல் அவசியம் என்றும் இதை மீறி அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவகம் பேக்கரி துரித உணவகம் மெடிக்கல்ஸ் மளிகை கடை மாவு கடை தள்ளுவண்டி சாலை ஓர கடைகள் பால் வியாபாரம் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட வணிகம் செய்வோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றனர்.
மேலும் உணவு மேற்பார்வையாளருக்கான பயிற்சி சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அமுதா , வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் , செயலாளர் சேகர் , பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments