Breaking News

வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

காஞ்சிபுரம், செப்.5:

தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு காஞ்சிபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வணிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.விழாவிற்கு பேரமைப்பின் மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தார்.மாநில துணைத் தலைவர் ஏ.வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார்.ஜி.செல்வக்குமார் வரவேற்றார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிமுகம் செய்து வைத்து பேசினார். 

காஞ்சிபுரம் மாவட்ட புதிய தலைவராக ஏ.வேலுமணி, மாவட்ட செயலாளராக டி.வி.தசரதன்ஷா, பொருளாளராக எம்.கான்சாமொய்தீன் உட்பட புதிய நிர்வாகக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் ராஜாஜி மார்க்கெட் மற்றும் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ராஜாஜி மார்க்கெட் அருகில் உள்ள அரசு மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்,போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அண்மையில் திறக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தின் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட துணைத்தலைவர் ஏ.சி.குமார் நன்றி கூறினார்.

கூட்டத்துக்கு பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது,

சமையல் எரிவாயு சிலிண்டரில் உயர்த்திய விலையைத்தான் மத்திய அரசு குறைத்திருக்கிறது.எனவே மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்.பூட்டியிருக்கும் கடைகளின் பூட்டுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் உடைத்து திருடுவது தொடருவதால் போலீஸாரின் ரோந்துப்பணியை அதிகரிக்க வேண்டும். இணைய வர்த்தகம், ஜி.எஸ்.டி வரி,உணவுப் பாதுகாப்புத்துறை இவற்றை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் வணிகர்கள் உள்ளனர். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


 

No comments

Thank you for your comments