Breaking News

பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை, செப்.27-

 பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன்  ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆனது.


விபத்து

பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த 17-ந் தேதி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல்  டி.டி.எப். வாசன் ஆஜர்படுத்தப்பட்டு வரும் அக்டோபர் 3-ந் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்றே ஜாமீன் கேட்ட நிலையில் வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை வந்த பொழுது  ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


தள்ளுபடி

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.எப். வாசன் கை முறிவு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி முன்னிலையில் ஜாமீன் கேட்டு டி.டி.எப். வாசனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நேற்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாசன் தரப்பில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் ஆகியோர் உடல்நிலை சரியில்லாமல் டி.டி.எப். வாசன் இருப்பதாகவும் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார்.

அரசு தரப்பில் ஆஜரான கார்த்திகேயன், டி.டி.எப். வாசனுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் இது தவறான முன் உதாரணமாக அமையும் என வாதாடினார்.

இதனை தொடர்ந்து நீதிபதி இன்னும் புலனாய்வில் விசாரணை முடிவடையாது நிலையில் ஜாமீன் வழங்க முடியாது, என்றார்.

No comments

Thank you for your comments