Breaking News

காஞ்சிபுரம் அருகே ரௌடிகொலை வழக்கில் 5 இளைஞர்கள் கைது

காஞ்சிபுரம்,செப்.10:

காஞ்சிபுரம் அருகே வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை ரௌடியை கொலை செய்த வழக்கில் 5 இளைஞர்களை வாலாஜாபாத் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படவிளக்கம் : (1) விக்கி என்ற விக்னேசுவரன்
 (2)சத்தியசீலன் (3)ஆதித்யா (4)குமரன்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் அஜித்(25)பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்தி சென்று காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் கொலை செய்தனர். 

பின்னர் உடலை அதே இடத்தில் போட்டு விட்டும், தலையை மட்டும் துண்டித்து எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் அருகே தாங்கி கிராமத்தில் ஒரு கோயில் அருகில் வீசி விட்டு தலைமறைவாகினர்.

தகவலறிந்து வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலையும்,தலையையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளின் செல்போன் எண்கள் மூலமாக கண்காணித்த போது அவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள விக்கிரவாண்டி ரயில்வே கேட் அருகில் காரில் சென்று கொண்டிருப்பதை அறிந்து போலீஸார் அங்கு சென்று அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அஜித் நண்பர்களிடையே அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தல் மற்றும் நண்பர்களின் வாகனங்களை வாங்கி வைத்துக் கொண்டு அதை திருப்பித் தர மறுத்தது போன்ற காரணங்களால் கொலை செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் வாலாஜாபாத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேசுவரன்(21)பூசி வாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்களான சத்தியசீலன்(21), ஆதித்யா(20), திம்மராஜம் பேட்டையை சேர்ந்த குமரன்(22) மற்றும் பூசிவாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இவர்களில் இருவரை காவல்துறையினர் விரட்டிப்பிடிக்க முயன்ற போது தப்பித்து ஓட முயற்சித்ததால் தவறி கீழே விழந்ததில் இருவருக்கு கால் எலும்பு முறிந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். 

இக்கொலை வழக்கு தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.


No comments

Thank you for your comments