Breaking News

செப்.15ம் தேதி காஞ்சிபுரத்திற்கு முதல்வர் வருகை... பொதுக்கூட்ட விழாப் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம்,செப்.11:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தொடக்கி வைக்க வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் விழாப் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் வரும் செப்.15 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.சிறப்பு மிக்க இத்திட்டத்திற்கு மகளிரிடம் மிகுந்த வரவேற்பும்,எதிர்பார்ப்பும் உள்ள நிலையில் இத்திட்ட தொடக்க விழாவானது முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அவரது பிறந்த தினமான செப்.15 ஆம் தேதியே தொடக்கி வைக்கப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு இத்திட்டத்தை அவரது திருக்கரங்களாலேயே தொடக்கி வைக்க இசைவளித்துள்ளார்.


விழா நடைபெறும் இடத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமான விழாப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.அகண்ட திரைகள் வாயிலாக நிகழ்ச்சி ஒலிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது.தெருவிளக்குகள் பராமரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

முதல்வர் தங்கவுள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதி செப்பனிடப்பட்டும்,வர்ணம் பூசப்பட்டும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.விழா நடைபெறும் மைதானம் பந்தல் அமைக்கப்பட்டுள்ள இடம் முழுவதும் நவீன ஜெசிபி இயந்திரங்கள் மூலம் தரைப்பகுதி சமப்படுத்தப்பட்டு வருகிறது. பந்தல் அமைக்கும் பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விழா நடைபெறும் இடத்திற்கான பச்சையப்பன் ஆடவர் நுழைவு வாயில் பகுதி அகலப்படுத்தப்பட்டும்,விழா நடைபெறும் மேடைக்கு முதல்வர் வரும் வழிகள் முழுவதும் தார்ச்சாலையாகவும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரங்கில் பார்வையாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி,போக்குவரத்து வசதி ஆகியன குறித்து ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எஸ்பி எம்.சுதாகர், எம்எல்ஏ க்கள் க.சுந்தர்,எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அரசு அலுவலர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.


No comments

Thank you for your comments