Breaking News

ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சி குளறுபடி - 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை கச்சேரியில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 



விழா ஏற்பாட்டாளர்களின் மெத்தனத்தின் காரணமாக கச்சேரிக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் மட்டுமல்லாமல், கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இந்த கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டதால் இவ்விவகாரம் பேசுபொருளாக மாறியது. 

பின்னர் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடிக்காக அதை ஒருங்கிணைத்த நிறுவனம் மன்னிப்பு கோரியது. தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலிருந்தும் வருத்தங்கள் தெரிவிக்கப்பட்டன.

சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படாதது, கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டது மற்றும் முதலமைச்சரின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது என இவ்விவகாரம் நீண்டு கொண்டே போன நிலையில், தற்போது காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து, செப்டம்பர் 10 ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சி விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், 

"பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, திருநெல்வேலி கிழக்கு சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Thank you for your comments