Breaking News

TNUSRB - இரண்டாம் நிலை காவலர் 2023 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) இரண்டாம் நிலை காவலர் 2023 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு  குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது, 

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்து முடித்தவர்களுக்கு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலைக்காவலர்  பணிக்கு 3559 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப் பட்டுள்ளது.

 இதில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படையில்)  780 (பெண்கள்) காலிப்பணியிடமும், இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்புக்காவல்படை)  1819 (ஆண்கள்) காலிப்பணியிடமும், இரண்டாம் நிலை சிறைக்காவலர் 86 காலிப்பணியிடமும்,  தீயணைப்பாளர் 674 காலிப்பணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக 18.08.2023 முதல் 17.09.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் 01.07.2023 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 28 வயது, ஆதிதிராவிடருக்கு 30 வயது உச்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி குறைந்தபட்சம்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.  

இந்நேரடி தேர்விற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

test banner

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு 31-ம் தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் போட்டி தேர்வர்கள் மற்றும் வேலைதேடுபவர்கள் ஆகியோர் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments