Breaking News

கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தறி துறை சார்பில், இன்று (07.08.2023) 9-வது தேசிய கைத்தறி தின விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை   முன்னிட்டு, கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை துணை இயக்குநர் கைத்தறி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, காமாட்சி அம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி பார்வையிட்டு, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1905-ம் ஆண்டு கொல்கத்தா டவுன் ஹாலில் ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில், அந்நிய நாட்டு பொருட்கள் மறுப்பு மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்தும் நோக்கமாக சுதேசி இயக்கம் துவங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில்  2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியில் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதனை தொடர்ந்து இன்று  கைத்தறி நெசவாளர் சிறப்பு மருத்துவ முகாம்  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனி, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காஞ்சிபுரம் செங்குந்தர் திருமண மண்டபம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் குடியிருப்பு, தாட்டித் தோப்பு ஆகிய 3 இடங்களில் நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர். உள்ளாட்சி, ஊராட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.  இந்த மருத்துவ முகாம்களில் 1200-க்கும்  மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள்  மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும் பயன்பெற்றனர்.  அதன் மூலம் வரும் காலங்களில் இவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிகழ்வினை தொடர்ந்து, 9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை வளாகத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு,   இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜவுளிகளை காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது.  

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் கைத்தறி துறை இணைந்து 100 கைத்தறி நெசவாளர்களுக்கு “நெசவாளர் முத்ரா“ திட்டத்தின் கீழ் தலா ரூ.1,00,000/- வீதம் ரூ.1.00 கோடி அளவில் கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நான்கு கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3.00/- இலட்சத்திற்கான பாதுகாப்பு திட்ட காசோலைகளும்,,  தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பத்து கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1000/- வீதம் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளும், தமிழ்நாடு அரசு கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு உரிய தனித்துவமான கோர்வை இரக சேலைகளை நெசவு செய்யும் வகையில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000/- மதிப்பில் SPF கோர்வை இயந்திரங்களும் மற்றும் காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த  1 பயனாளிக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டு பத்திரம் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர்,  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்,  மாநகராட்சி மேயர் திருமதி. மகாலட்சுமி யுவராஜ்,  காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் திருமதி. நித்தியா சுகுமார், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு.இராஜாராம், உதவி இயக்குநர்/நிர்வாக இயக்குநர் திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் திரு.செந்தாமரை, உதவி இயக்குநர்/துணை இயக்குநர் திரு.ர.ஸ்ரீதரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் திரு.முத்துச்செல்வன்,  அரசு அலுவலர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments