தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக, காஞ்சிபுரம் மாநகர வணிகர் சங்கங்கள், ஜவுளி கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் காஞ்சிபுரம் மாநகர பொதுமக்கள் ஆகியோருடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு வருகின்ற உள்/வெளி மாவட்ட/மாநில பக்தர்கள் மற்றும் திருமண மண்டபங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், ஜவுளி மற்றும் துணிக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு வருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காஞ்சிபுரம் மாநகரில் பெருகி வரும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான நகர புல எண்.1137/1 மற்றும் 1128/4ல் 1.75 ஏக்கரிலும், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நகர புல எண்.3036/5ல் (யாத்ரி நிவாஸ்) 8.27 ஏக்கரிலும், உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நகர புல எண்.755/1A மற்றும் 756ல் 1.86 ஏக்கரிலும், மேட்டுத் தெருவிலுள்ள நகரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நகர புல எண். 285/1 முதல் 16 வரை 6.59 ஏக்கரிலும் மற்றும் சித்தேஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமான நகர புல எண். 432/1ல் 0.61 ஏக்கரிலும் நிரந்தர வாகனம் நிறுத்துமிடம் அமைத்திட சம்மந்தப்பட்ட கோவில் நிலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான வெங்கடகிரிராஜா தோட்டத்தை (AKG மஹால் அருகில்) 1.75 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 22.08.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகருக்குள் மேலும் சில இடங்களில் தற்காலிக வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக காஞ்சிபுரம் மாநகர வணிகர் சங்கங்கள், ஜவுளி கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் காஞ்சிபுரம் மாநகர பொதுமக்கள் ஆகியோருடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments