அரசியல் கட்சி பிரமுகர்களுடனான முன்னேற்பாடுக் கூட்டம் நடைபெற்றது
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம்/ பெயர் மாற்றம்/ புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கு ஏதுவாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கான முன்னேற்பாடுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24.08.2023 அன்று கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால், வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கு கீழ் கண்டுள்ளவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவிவாக்காளர் பதிவு அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்வதற்கு முன்பாக, தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் நேரடியாக களப்பணி செய்து, வாக்குச்சாவடி மையங்களை உறுதி செய்தல் வேண்டும். அவ்வாறு களப்பணி செய்யும் போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளான (Assured Minimum facilities) குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி மற்றும் கட்டிட உறுதிதன்மை உள்ளதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் பழுதடைந்த நிலையிலோ அல்லது பழமையான கட்டிடமாக இருக்கும் பட்சத்தில், அருகாமையில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி/ தனியார் பள்ளி கட்டிடம்/ அரசு கட்டிடங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் ஒப்புதல் பெற்று முன்மொழிவுகள் அனுப்பி வைக்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் கோரப்பட்டுள்ளது.
நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளும், 1500-க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள பாகங்களை இரண்டு பாகங்களாக பிரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து வாக்குச்சாவடிகளும் இருபாலர்களுக்கான வாக்குச் சாவடிகளாக இருப்பதை உறுதி செய்திட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் எழாத வண்ணம், வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்து, முன்மொழிவுகள் அனுப்பிட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவிவாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் நல் ஒத்துழைப்பு நல்கிட கோரப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையில் 01.01.2024- ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, எதிர் வரும் 05.01.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறுமுன் திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் செய்திட கீழ்கண்டுள்ள விபரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வ. எண் நாள் கிழமை
1. 04.11.2023 சனி
2. 05.11.2023 ஞாயிறு
3. 18.11.2023 சனி
4. 19.11.2023 ஞாயிறு
எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், தங்கள் ஆளுகைக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு தகவல் தெரிவித்து, நாளது தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டவர்கள், இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம்/ பெயர் மாற்றம்/ புதிய வாக்குச்சாவடி அமைத்தல் பணியானது, 100 சதவீதம் தூய்மையாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேதியான 31.08.2023 க்குள் முடித்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், திரு.ஜ.சரவணக்கண்ணன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
Post Comment
No comments
Thank you for your comments