Breaking News

கடத்திச் சென்ற குழந்தைகள் இருவரையும் தனிப்படை போலிசார் மீட்பு



காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா வெங்கச்சேரி கிராமம் இருளர் காலனியை சேர்ந்த மூர்த்தி என்ற கூலி தொழிலாளியின் மனைவி காமாட்சி 2வது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

காமாட்சிக்கு உதவியாக மூர்த்தி அவரது குழந்தை சக்திவேல் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் மருத்துவமனையில் பார்வையாளர் கூட்டத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பார்வையாளர் கூடத்தில் இருந்த மூர்த்தியின் 3 வயது குழந்தை சக்திவேலும், மூர்த்தியின் அண்ணன் ஏழுமலையின் 7 வயது மகள் சௌந்தர்யாவும் திடீரென காணாமல் போய் உள்ளனர்.

குழந்தைகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்ததின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 50 வயது பெண்மணி ஒருவர் குழந்தைகள் இருவரையும் அழைத்துச் செல்வது தெரியவந்தது.

குழந்தைகள் இருவரையும் பெண்மணி கடத்தி சென்றுள்ளது தெரிய வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா சுதாகர் உத்தரவின் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

மூன்று நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் குழந்தைகள் இருவரும் வாலாஜாபாத் தாலுக்கா அஞ்சூர் கிராமத்தில் உள்ள பண்ணை நிலத்தில் இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர்.

பண்ணையில் குழந்தைகளை வைத்திருந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்

மேலும் மருத்துவமனை வளாகத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் நெருங்கி பழகியவாறு குழந்தைகளை கடத்திச் சென்ற லட்சுமி என்ற பெண்மணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா சுதாகர்,

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றோர்களிடமும் குழந்தைகளிடமும் நெருங்கி பழகிய பெண்மணி ஒருவர் குழந்தைகள் சக்திவேல் சௌந்தர்யா ஆகிய இருவரையும் ஆசையாக பேசி தின்பண்டங்களை வாங்கி தருவதாக கூறி கடத்திச் சென்றது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தற்பொழுது இரு குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டு உள்ளனர் என்றும்,

குற்றவாளிகளை  விரைவாக கண்டுபிடித்த போலீசாருக்கும் ஒத்துழைப்பு நல்கிய பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் சிசிடிவிகள் தான் குற்றவாளிகளை பிடிக்க பெரிதும் உதவி வருவதால் பொதுமக்கள் தங்களால் முயன்ற அளவு அனைத்து பகுதிகளிலும் சிசிடிவிகளை பொருத்த வேண்டும் 

என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா.சுதாகர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்

No comments

Thank you for your comments