மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.87.15 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், அகரம்தூளி கிராமத்தில் இன்று (09.08.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 182 பயனாளிகளுக்கு ரூ.87.15 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.
இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 02.08.2023 முதல் 07.08.2023 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஊனமுற்றோர் நான்கு சக்கர வாகனம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 74 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 182 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூபாய் 87 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களில், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 7 நபர்களுக்கும், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 நபர்களுக்கும், வருவாய் துறை மூலம் அடிப்படை தேவைகளான பழங்குடியினர் வகுப்பு சான்று 84 நபர்களுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 -நபர்களுக்கும், குடும்ப அட்டை நகல் 14 நபர்களுக்கும், இலவச வீட்டுமனைப்பட்டா 05 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடன் 04 - நபர்களுக்கும், தனி நபர் கிணறு - 05 நபர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தேய்ப்புப்பெட்டி- 13 நபர்களுக்கும், தொழில் துறை மூலம் தொழில் கடன் மானியம் - 05 நபர்களுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடு பொருட்கள் மானியம் - 08 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் நாற்றுகள் விதை மானியம் -10 நபர்களுக்கும் கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு கடன்- 10 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் மானியம் - 05 நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இம்முகாமில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், உத்திரமேரூர் ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.ஹேமலதா ஞானசேகர், உத்திரமேரூர் ஒன்றிய குழுத் துணைதலைவர் திருமதி. வசந்தி குமார், உத்திரமேரூர். வட்டாட்சியர் திரு. ஞானவேல், அகரம்தூளி ஊராட்சி மன்றத்தலைவர். திருமதி.லட்சுமி வீரராகவன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் உத்திரமேரூர் வட்டம், அகரம்தூளி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்த பின் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையை பார்வையிட்டு, பொருள்களின் இருப்பு நிலையை கேட்டறிந்தார்கள்.
மேலும் அகரம்தூளி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, பள்ளியில் உள்ள சமையல் கூடத்தினையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். இதனை தொடர்ந்து அகரம்தூளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மைய கட்டிடம் மற்றும் நூலகத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments