Breaking News

ரூ.30 ஆயிரம் கோடி... பிடிஆர் ஆடியோ விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: 

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அதில், "உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, அது தோராயமாக 30,000 கோடி ரூபாய் இருக்கும்" என்று அந்த ஆடியோவில் தெரிவிக்கப்படிருந்தது.

அதேவேளையில், "அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அது போலி என்பதற்கான தொழில்நுட்ப ரீதியான ஆதாரமும் உள்ளது” எனக் கூறி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிரனேஷ் ராஜமாணிக்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "30 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பாக தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரிக்க உத்தரவிடக் கூடாது. எனவே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, "அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடக் கூடாது. குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளின்படி போதுமான நடவடிக்கை எடுக்க, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, அரசியலுக்கான தளமாக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது" எனக் கூறி, சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

🔥Also Read : தொடர்புடைய செய்திகள் 

என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு வழங்க தயார்" - நிதி அமைச்சர் பிடிஆர்-க்கு அண்ணாமலை சவால்

அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ "போலியானது" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

No comments

Thank you for your comments