Breaking News

காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜூலை 28- 

வெளி மாநிலங்களிலிருந்து விசைத்தறையில் கைத்தறி பட்டு உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி காஞ்சிபுரம் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தினர் வெள்ளியன்று (ஜூலை 28) காஞ்சிபுரத்தில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கைத்தறி தொழிலை நம்பி காஞ்சிபுரம் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். சமிபகாலமாக கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட பட்டு சேலை, வேட்டி மற்றும் டவல் உள்ளிட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்கின்றனர். 

இந்த சட்ட விரோதமான உற்பத்தியால் கைத்தறி துணிகள் விற்பனையின்றி தேங்கிள்ளன. பட்டு மற்றும் கைத்தறிதுணி தேக்கத்தால் கைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

12 விதிகளை மீறி சட்ட விரோதமாக கைத்தறி பட்டு சேலைகள் விசைத் தறியில் உற்பத்தி செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி, மதிப்பிலான சேலைகள் விற்பனையாகாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சம் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயத்திற்க்கு அடுத்து பிரதானமாக கைத்தறி நெசவுத் தொழில் உள்ளது. கைத்தறிச் சேலைகள் உற்பத்தியில் தமிழ்நாடு 3-ஆவது பெரிய மாநிலமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் கைத்தறிச் சேலைகளில் பெரும்பாலானவை சட்ட விரோதமாக விசைத்தறியில் உற்பத்தியாவதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மேலும் விசைத்ததியில் பட்டுச் சேலைகளின் உற்பத்தி அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அதன் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.1000 கோடி மதிப்பிலான கைத்தறி பட்டு சேலைகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது. ஆந்திர மாநிலம், தர்மாவரம் என்ற நகரம் முழுவதுமே விசைத்தறிக் கூடங்களே அதிகமாக உள்ளன. 

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பட்டு சேலைகள் தேங்கியுள்ள சூழலில் தமிழக விற்பனையாளர்கள் வெளி மாநிலங்களில் விசைத்தறி சேலைகளை கொல்முதல் செய்கின்றனர். அதனால் கைத்தறி நெசவாளர்கள் போதுமான கூலிக் கிடைக்காமலும், வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எனவே சட்டவிரோத விசைத்தறி உற்பத்தியை தடுக்க வேண்டும். விசைத்தறி சேலைகளால் கைத்தறி பட்டு சேலைகளின் விற்பனை பாதிப்பை தடுக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து விசைத்தறியில் கைத்தறி பட்டு ரகங்களை உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் சந்தைபடுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

கைத்தறி ரக சேலைகள் விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடைசெய் வேசண்டும். கைத்தறி நெசவாளர் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உற்பத்தி செய்து தேங்கியுள்ள சேலைகளை தனியார் மற்றும் கூட்டுறவு நிலையங்களில் அரசே குறைந்த லாபத்துடன் கொள்முதல் செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்ததி காஞ்சிபுரம் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்  ஜி.எஸ்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். 

இதில் மாவட்ட செயலாளர் வி.சிவபிரகாசம் சிஐடியு நிர்வாகிகள் எஸ்.பழனி, ஜி.வசந்தா, கே.ஜீவா, ஜி.லட்சுமிபதி,  சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர், செய்யாறு கம்பன் கைத்தறி சங்கம் கணேசன், காஞ்சிபுரம் நெசவாளர்கள் கணேசன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.சங்கர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். 

தமிழக முழுவதும் பட்டுக்கைத்தறி நெசவுத்தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. கைத்தறி தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வாதரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குனரிடம் மனு அளித்தனர். 

இதற்கு முன்னதாக ரங்கசாமி குளம் அருகிலிருந்து நெசவுத் தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments