ரூ. 43 லட்சம் மதிப்பிலான திருட்டு செல்போன்கள் பறிமுதல்... அரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் விற்பனை கடையின் பூட்டை உடைத்து மூட்டை மூட்டையாய் செல்போன்களை திருடி சென்ற வழக்கில் நவீன திருட்டுக்கு பெயர் பெற்ற அரியானா மாநிலம் மோவாட் பகுதியை சேர்ந்த 4 பேர் கைது.
- 43 லட்ச ரூபாய் மதிப்பிலான 234 செல்போன்கள், கடத்திச் செல்ல பயன்படுத்திய லாரி பறிமுதல்.
- காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா சுங்குவார்சத்திரம் பகுதியில் மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் வயது 32 என்பவர் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டரை நடத்தி வருகிறார்.
கடந்த 16ஆம் தேதி இவரது கடையின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உயர்ரக செல்போன்களை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்று விட்டனர்.
திருட்டுச் சம்பவம் குறித்து அப்துல் ரகுமான் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா சுதாகர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்மமானவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் செல்போன் திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீசாரின் தீவிர வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற வெளி மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில், நவீன கொள்ளை மற்றும் திருட்டிற்கு பெயர் பெற்ற அரியானா மாநிலம் மோவாட் பகுதியைச் சேர்ந்த ஹமித் உசைன் 35 இர்பான் 28 ஜாவித் 25 அலி ஜான் 50 ஆகிய நான்கு பேர் செல்போன் திருட்டு வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 234 உயர்ரக செல்போன்களும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செல்போன் திருட்டு வழக்கில் சமயோஜிதமாக செயல்பட்டு விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா சுதாகர் வெகுவாக பாராட்டினார்.
No comments
Thank you for your comments