காமாட்சியம்மன் புதிய பட்டு விற்பனையகம் திறப்பு
காஞ்சிபுரம், ஜூலை 20:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் புதிய பட்டு விற்பனையகம் திறப்பு விழா, அமைச்சர்கள் ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயில் அருகில் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி புதிய விற்பனை நிலையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து 10 நெசவாளர்களுக்கு ரூ.5லட்சம் மதிப்பில் முத்ரா திட்டத்துக்கான கடனுதவிகளையும், 24 நெசவாளர்களுக்கு ரூ.48 லட்சம் மதிப்பிலான மின்னணு ஜக்கார்டு இயந்திரங்களையும் வழங்கினார்.
விழாவிற்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முதல் விற்பனையை தொடக்கி வைத்தார்.
பின்னர் இரு அமைச்சர்களும் இணைந்து விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டுச்சேலை ரகங்களை பார்வையிட்டனர்.
விழாவிற்கு கைத்தறித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையாளர் கே.விவேகானந்தன், ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்க உதவி இயக்குநர் த.ஆனந்த் வரவேற்று பேசினார். விழாவில் மாநகர திமுக செயலர் சி.கே.வி.தமிழ்செல்வன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யாசுகுமார், கைத்தறித்துறை இணை இயக்குநர் கணேசன், உதவி இயக்குநர்கள் ஸ்ரீதர், செந்தாமரை, காமாட்சியம்மன் கூட்டுறவு சங்க தலைவர் பா.ஸ்டாலின், துணைத் தலைவர் என்.பி.ஜெயராமன், சிஐடியூ மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், சிபிஎம் நகர் செயலாளர் ஜெ.கமலநாதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments