வரதர் கோயில் திருவிழா - பொதுமக்களுக்கு உதவியாக காவல்துறையில் உதவும் மையங்கள் அமைப்பு -எஸ்.பி தகவல்
காஞ்சிபுரம்,மே 31:
இது குறித்து அவர் மேலும் கூறியது, விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கடந்த மே மாதம் 28 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. ஜூன் 2ம் தேதி கருட சேவையும், ஜூன் 6ம் தேதி தேரோட்டமும், ஜூன் 8ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
இவற்றில் பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 4 லட்சம் பேர் வருவார்கள் என தெரிய வருகிறது. இதற்கென ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கருடசேவை மற்றும் தேரோட்ட நாட்களின் போது பாதுகாப்பு கருதி சாலைகளில் உள்ள மின்கம்பிகள் மற்றும் மின் ஒயர்களிலிருந்து மின்விபத்துகள் ஏற்பட்டு விடாதவாறு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
எனது தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர்கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். முதியோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காவல்துறையின் சார்பில் முக்கிய இடங்களில் உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் தேராட்டத்தின் போது குடிநீர் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படும். குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் வாகனத்தணிக்கையும், விடுதிகளில் சோதனைகளும் நடத்தப்படும்.
உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க வேண்டும். திருவிழாக் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்று வழித்தடங்களை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சாமி ஊர்வலம் செல்லும் பாதைகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2ம் தேதி கருட சேவை, ஜூன் 6ம் தேதி தேரோட்டத்தின் போது செயல்படும் வகையில் புதிய ரயில் நிலையம், ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பு, பழைய ரயில் நிலையம், ஓரிக்கை சந்திப்பு, செவிலிமேடு சந்திப்பு ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் எஸ்பி எம்.சுதாகர் கேட்டுக்கொண்டார்.

No comments
Thank you for your comments