Breaking News

கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி - பெற்றோர்கள் முற்றுகை

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடம் அதிக நன்கொடை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது தலையாசிரியர் அறையை  பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.



தமிழகத்தில் 2023-2023 கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் முடிவுற்று தற்போது கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.



இந்நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் என அனைத்துப் பள்ளிகளிலும் 11ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் அரசு உதவி பெறும் பள்ளியான அந்திரசன் மேல்நிலை பள்ளியிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் சேர்க்கைக்காக அப்பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதோடு, நன்கொடையும் வசூலித்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.

மேலும் நன்கொடையாக 10, ஆயிரம் ரூபாய், கட்டணமாக 9 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 19 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்விக்கு புகார் சென்றுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு நடத்தி உரிய அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி சொர்ணலஷ்மிக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக அந்திரசன் மேல்நிலை பள்ளியில் தலையாசிரியர் அறையில் விசாரணை மேற்கொண்டார் மாவட்ட கல்வி அதிகாரி சொர்ணலஷ்மி.

பள்ளியில் ஆய்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டது. விசாரணையில், ’’கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறோம்’’ என பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் எழுத்துப்பூர்வ ரசீது கொடுத்து நன்கொடை பெற்றது அம்பலமானது. ஆனாலும், அதையும் பெற்றோர்கள் விருப்பத்தின் பெயரில் கொடுத்ததாக, பள்ளி தரப்பில் அதிகாரிகளிடம் விளக்கம் கொடுக்கப்பட்டது.

பெற்றோர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டதில் கட்டாயத்தின் பெயரிலேயே நன்கொடை வசூலித்ததும், கல்வி கட்டணத்திற்கான கணினி ரசீதும், நன்கொடைக்கான எழுத்துபூர்வமான ரசீதும் கொடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நன்கொடை ரசீதில் SCHOOL GIFT எனத் தெளிவுபட எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கை ஜூன் 2-ஆம் தேதி நடைபெறுமென பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இதனால் கொந்தளித்த பெற்றோர்கள் ’’காலை முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது எதற்காக நிறுத்தப்பட்டது?’’ எனக் கேட்டு கட்டணம் விவரம் குறித்து தெரிவிக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிச் சேர்க்கைக்காக வந்தவர்களிடம், உரிய கட்டண விவரத்துடன் தகவல் பலகை வைக்கப்பட்டு 2-ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமென பள்ளி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சேர்க்கைக்காக வந்த மாணவர்கள் தற்போது தங்களது பெயர்களை மட்டும் பதிவு செய்துவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘’பெற்றோர்கள் தங்களது விருப்பத்துடன்தான் பள்ளிக்கு நன்கொடையாக பணம் அளித்து வருகின்றனர்.

விருப்பமில்லாதவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதற்கான ரசீதும் பள்ளி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது’’ என விளக்கமளித்துள்ளனர்.

No comments

Thank you for your comments